ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே ராணுவ முகாமில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் லட்சுமணன் உள்ளிட்ட 3 ராணுவ வீரர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தம் இன்னுயிரை தியாகம் செய்து வீரமரணம் எய்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த தீவிரவாத தாக்குதலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. லட்சுமணனின் உடல் நாளை காலை ராணுவ விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதை செலுத்திய பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர் லட்சுமணனின் சொந்த ஊரான புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீரமரணம் எழுதிய 3 ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தம் இன்னுயிரை தியாகம் செய்து வீரமரணம் எய்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் தற்கொலைப்படைப் பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொண்டு மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 3 வீரர்கள் வீரமரணம் எய்திய நிகழ்வு மிகுந்த வேதனையளிக்கிறது. இன்னுயிர் ஈந்து நாட்டைக் காத்த நாயகர்களுக்கு என் வீரவணக்கம்! அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்!” எனத் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியின்போது உயிர்த் தியாகம் செய்த துணிச்சலான ராணுவ வீரர் லட்சுமணன் மற்றும் அவருடன் உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை தேசம் எப்போதும் நன்றியுடன் நினைவு கூரும் எனத் தெரிவித்துள்ளார்.