அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை மக்களுக்கு காட்டிய இம்ரான் கான்!

இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியின் வீடியோவை மக்களுக்கு போட்டு காட்டி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவால், பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவியை இழந்தார். அதன் பிறகு, இந்தியாவை அவர் தொடர்ந்து பாராட்டி பேசி வருகிறார். கடந்த 3ம் தேதி லாகூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய இம்ரான், “அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணியாமல், தைரியமான வெளியுறவு கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. தனது நாட்டு மக்களுக்காக ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி குவிக்கிறது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்போ, அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்கிறார்” என்று சாடினார்.

அதோடு, பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியின் வீடியோவையும் அவர் ஒளிபரப்பினார். அதில், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதின் மூலம், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுகமாக உதவுகிறது என்று கூறினால், ரஷ்யாவிடம் இருந்து மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் காஸ் வாங்குவதை என்னவென்று சொல்வீர்கள்? அது மட்டும் போருக்கு உதவி செய்வது ஆகாதா?” என்று தன்னை பேட்டி கண்டவரிடம் ஜெய்சங்கர் கேட்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இம்ரானின் இந்த செயல், பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.