முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினரின் இரு நாள் இந்திய பயணத்திற்காக மத்திய அரசு ரூ. 38 லட்சம் செலவு செய்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 24, 25 ஆகிய இரு நாள் பயணமாக அப்போதைய அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், மனைவி மெலினா, மகள், இவாங்கா, மருமகன் ஜொட் குஷ்னர், இவர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் என பெரும் படையுடன் இந்தியா வருகை தந்தனர். அப்போது குஜராத்தின் ஆமதாபாத், உ.பி. மாநிலம் ஆக்ரா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு விசிட் அடித்தனர்.
இந்நிலையில் மிஷால் பஹத்தேனா என்ற தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர், டிரம்ப் குடும்பத்தினரின் இரு நாள் பயணத்திற்காக மத்திய அரசு செய்த செலவு விவரம் குறித்து தகவல் கேட்டு மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்திடம் 2020 அக்டோபர் 24ம் தேதி மனு செய்தார். கோவிட் பரவல், பொது முடக்கம் காரணமாக தகவல் தராமல் பொதுத்தகவல் அலுவலர் இழுத்தடிப்பு செய்தார். மேல் முறையீடு செய்ததன் விளைவாக கடந்த ஆக.04 ம் தேதி மேல்முறையீட்டு பொதுத்தகவல் அலுவலர் தகவல் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, 2020 பிப்ரவரி 24, 25 இரு நாள் டிரம்ப் குடும்பத்தினரின் இரு நாள் பயணத்தின் போது அவர்களுக்கு பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் , போக்குவரத்து என 36 மணி வருகைக்காக ரூ. 38 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.