38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடல் உத்தரகண்ட் மாநிலத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
லான்ஸ் நாயக் சந்திர சேகர் என்ர வீரரின் எலும்புக்கூடுகள் கடந்த ஆகஸ்ட் 13 அன்று சியாச்சினில் 16,000 அடி உயரத்தில் உள்ள ஒரு பழைய பதுங்கு குழியில் கண்டெடுக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு சியாச்சின் ஆபரேஷன் மேக்தூத்-இன் ஒரு பகுதியாக இருந்த சந்திரசேகர், பாயிண்ட் 5965ஐ கைப்பற்றும் பணி வழங்கப்பட்ட ராணுவ குழுவில் இருந்தார். இந்த பகுதியானது, பாகிஸ்தானியர்கள் கைப்பற்ற நினைத்த முக்கிய பகுதியாக இருந்தது. இதற்காக சியாச்சின் பனிப்பாறை பகுதிகளுக்கு 19 குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு ராணுவ குழு உடனடியாக அனுப்பப்பட்டது.
மே 29, 1984இல் நடந்த சியாச்சின் ஆபரேஷன் மேக்தூத்தின் முதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். அங்கு பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் நின்று கொண்டிருந்த போது, இரவு திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 18 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். அதில் உயிரிழந்த 14 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 5 பேரை காணவில்லை. இந்நிலையில், கோடை மாதங்களில், பனி உருகும்போது, காணாமல் போன வீரர்களைக் கண்டறிய ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்போது தான் இம்மாதம் சியாச்சின் பனிப்பாறையில் உள்ள பழைய பதுங்கு குழிக்குள் வீரர் சந்திரசேகரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது உடல் நைனிடாலில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.