தர்மபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ், திமுக, அதிமுகவையும் சாடி பேசினார். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி, தர்மபுரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார். முதல் நாளான நேற்று ஒகேனக்கலில் உள்ள கூட்டுக் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார். இரண்டாவது நாளான இன்று குரும்பட்டி, நடுப்பட்டி, ஒடசல்பட்டி, உள்ளிட்ட இடங்களில் அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்குள்ள டீக்கடையில் தேநீர் குடித்த அவர், அங்கு இருந்து பொதுமக்களிடையே தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தின் பயன்களை விளக்கும் வகையில் இருந்த துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தார். அதன் பின்னர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
வாழ்வாதாரம் இல்லாததாலேயே இங்குள்ள இளைஞர்கள் ஈரோடு, கோவை போன்ற ஊர்களுக்குச் செல்கின்றனர். இதைத் தடுக்க சிப்காட் அமைத்து வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். எனவே தர்மபுரி காவிரி உபரிநீர் திட்டத்தைக் கொண்டு தீர வேண்டும். ஆனால், இந்தத் திட்டம் குறித்தெல்லாம் திமுகவுக்கும் தெரியாது, அதிமுகவுக்கும் தெரியாது. அதிமுக திமுக என இரு கட்சிகளும் அடுத்த தேர்தல் குறித்தே சிந்திப்பார்கள். ஆனால், பாமக மட்டும்தான் அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறது. அவர்களுக்கு ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் குறித்தும் தெரியாது. நாங்கள் தான் இந்த திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என முதலில் வலியுறுத்தினோம். காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றும் வரை போராடிக் கொண்டே இருப்பேன். இந்தத் திட்டத்திற்காக அனைத்து கட்சிகளும் போராட வேண்டும். மதம் ஜாதி பாகுபாடின்றி அனைவரும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 18 லட்சம் மக்களில் 15 லட்சம் மக்கள் பயன்பெறக்கூடிய திட்டமாகும். நல்ல ஆட்சியாளர்களாக இருந்தால், இந்நேரம் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு மாவட்டத்தில் 80 சதவீதம் மக்கள் பயன் பெறுவார்கள் என்றால் என்ன செலவானாலும் திட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், இந்த திட்டத்தினை 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றி இருப்பேன்.
தற்பொழுது அமைதியாக அன்பாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, என் தம்பி தங்கைகள் பொறுக்க மாட்டார்கள். என் தம்பிகள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள், போராட்டம் எப்பொழுது? போராட்டம் அறிவியுங்கள் என்று. என் தம்பிகள்தான் கேட்கிறார்கள் என்றால், என் சகோதரிகள் அவர்களை விடத் துடிப்பாக இருக்கிறார்கள். இந்த திட்டத்திற்காக அரசு நிச்சயமாக நிதி ஒதுக்கி நிறைவேற்றித் தரும். அப்படித் தரவில்லை என்றால் அடுத்த கட்டம் போராட்டம் தான். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “இலவசங்கள் குறித்து 10 ஆண்டுகளாகவே நாங்கள் பேசி வருகிறோம். கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாய இடுபொருள்களை இலவசமாகக் கொடுக்க வேண்டும். அவை தான் வளர்ச்சிக்கு உதவும் இலவசம். கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட இலவசங்கள் வாக்குக்களைப் பெற உதவுமே தவிர வளர்ச்சிக்கு உதவாது. இதன் காரணமாகவே மாநிலத்திற்கு 6.40 லட்சம் கோடி கடன் ஏற்பட்டு உள்ளது. இந்தக் கடனுக்கு வட்டியாக மட்டும் நாம் 97 ஆயிரம் கோடி கட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். நாட்டிலேயே அதிக கடனை வாங்கிய மாநிலமாகத் தமிழகம் தான் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாகவே, அதாவது ஜெயலலிதா, கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றனர். இதற்காக 1500 ஏக்கர் நிலம் இருக்கும் நிலையிலும், இந்தத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரம் வாக்குக்காக மட்டும் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். ஆனால், தேர்தலுக்குப் பின்னர் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் மறந்துவிடுகிறார்கள். இந்த காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது எனக் கூறும் அதிகாரிகளை நீக்கிவிட்டுச் சரியான அதிகாரிகளை நியமித்துத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.