திமுக – பாஜக கூட்டணி பற்றி பேச பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன உரிமையும் இல்லை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக பாஜக – திமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி ரீதியாக நெருங்கி வருவதாக பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்தன. இதையடுத்து விசிக தலைவர் எம்பி திருமாவளவனின் மணி விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. எங்கள் கொள்கை அறிவாலயத்தில் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ஆட்சியிலும் இருக்கும். நாங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.பாஜகவுடன் சிறிய சமரசத்தை கூட நாங்கள் செய்து கொள்ள மாட்டோம், என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்காது. பாஜகவுடன் கூட்டணி வைக்கும் தகுதி திமுகவிற்கு இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சை சீமான் விமர்சனம் செய்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சீனாவின் உளவு கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது. நாம் அனுமதிக்க கூடாது என்று இலங்கையிடம் சொல்லியும் இலங்கை அந்த சீன கப்பலை அனுமதித்து உள்ளது. நீங்கள் இலங்கை மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்? இலங்கைக்கு உளவு வானூர்தி கொடுத்தது மத்திய அரசு தானே. இது என்ன வேடிக்கையாக இருக்கிறது. இலங்கை மீது நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை சீனாவின் அடிமை. அவர்களுக்கு ஏன் நீங்கள் உதவி செய்கிறீர்கள். அதை எல்லாம் நீங்கள் உணர மாட்டீர்களா. அவர்களை நம்புவதை போல பேராபத்து கிடையாது.
இலவசம் வேண்டாம் என்று சொல்வதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது. குஜராத்தில் மோடி இலவசம் கொடுக்கவில்லையா? உங்களுக்கு இலவசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் இலவசம் கொடுத்தாலும் நல்ல கல்வி கொடுக்கிறாரே. டெல்லியில் அவர் நிரூபித்து காட்டினார். பாஜக என்ன செய்தது. நீங்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பது மட்டும் இலவசம் கிடையாதா? என்று சீமான் குறிப்பிட்டார்.
இதையடுத்து செய்தியாளர் ஒருவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவிற்கு தகுதி இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று சீமானிடம் கேட்டார். அதற்கு சீமான், அதை எல்லாம் தம்பி (அண்ணாமலை) சொல்ல கூடாது. அண்ணாமலை மெயின் ஆர்ட்டிஸ்ட் கிடையாது. வசனம், இயக்குனர் எல்லாம் வேறு ஆள். அண்ணாமலை உங்களுக்கு அந்த வசனமே இல்லையே. அண்ணாமலைக்கு இப்படி பேச ஏதாவது உரிமை இருக்கிறதா? தம்பி அண்ணாமலைக்கு இந்த முடிவு எடுக்கும் உரிமை இருக்கிறதா? உங்கள் எஜமான் அமித் ஷா இப்படி சொன்னாரா? உங்களின் பெரிய எஜமான் மோடி சொன்னாரா? இனிமே எதுக்கு கூட்டணி? நீங்க கூட்டணியில் தானே இயங்குகிறீர்கள்? தமிழ்நாட்டில் ஏன் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். சான்ஸ் இல்லை அவர்கள் ஆட்சி அமைக்காமலே திமுக வழியாக ஆட்சி செய்து கொண்டு தானே இருக்கிறார்கள். தம்பி அண்ணாமலை இப்படி கூட்டணி இல்லை என்று சொல்வது ஒரு ஆற்றாமையில் பேசுகிறார். ஆனால் இப்படி சொல்லும் உரிமை அவருக்கு இல்லை. இதில் முடிவு எடுக்கும் உரிமை அவரிடம் இல்லை. அதை எல்லாம் மேலிடம்தான் முடிவு எடுக்கும். அவருக்கு இதற்கான உயரம், உரிமை இல்லை என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.