உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்: முதல்வர் ஸ்டாலின்!

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்வேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை இணைந்து வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் சென்னையில் போக்குவரத்து காவல் துறை சார்பில் கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு வரை மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்த “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஒரு வருடத்திற்கு சென்னை அண்ணாநகர் 2-வது அவென்யூ, ராஜீவ்காந்தி சாலை (ஓஎம்ஆர்), காந்தி நகர் 4-வது பிரதான சாலை (அடையாறு), காதர் நவாஸ் கான் சாலை (நுங்கம்பாக்கம்), லஸ் சர்ச் சாலை (மயிலாப்பூர்), ஆர்ம்ஸ் சாலை (கீழ்ப்பாக்கம்), லட்சுமணன் சாமி சாலை (கே.கே.நகர்) காமராஜர் சாலை (மெரினா) ஆகிய 8 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகளில் 3 மணி நேரத்துக்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச வாடகை சைக்கிள் ரெய்டு, ஸ்கேட்டிங், பூப்பந்து, போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்தவகையில், இன்று அண்ணா நகரில் நடைபெற்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, கூடைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினார், உடற்பயிற்சி செய்தார். குழந்தைகள் ஸ்கேட்டிங் செய்ததைப் பார்வையிட்டு, உடற்பயிற்சி செய்பவர்களைப் பாராட்டினார், பொதுமக்களுடன் கலந்துரையாடி, செல்பி எடுத்துக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது நான் 2, 3 நாட்களில் குணமடைந்துவிட்டேன். எனக்கு பெரிதாக பாதிப்பு வராததற்கு உடற்பயிற்சியே காரணம். எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போது உடலை பேணி பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவேன். எனக்கு 69 வயதாகிறது. ஆனால், யாரும் நம்பமாட்டீர்கள். நானும், எனது மகனும் வெளிநாடுகளுக்குச் சென்றால் ‘அண்ணன், தம்பியா?’ எனக் கேட்பார்கள். நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன் தம்பி போல இருக்கிறோம். வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. அதற்காக சாப்பிடாமலும் இருக்க கூடாது. என்ன சாப்பிட்டாலும் உடற்பயிற்சி அவசியம். ஜிம், யோகா, நடைபயிற்சி ஆகியவற்றை செய்கிறேன். உடல்நலத்தை பேணி பாதுகாத்து வந்தால் எந்த கவலை, டென்ஷன் வந்தாலும் அதில் இருந்து விடுபடலாம். எனவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யுங்கள்” எனத் தெரிவித்தார்.