பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா சார்பில் 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை நாட்டில் கடந்த 3 மாதங்கள் பெருத்த சோதனையாக இருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. பழைய நிலைக்கு நாட்டை கொண்டு வர அரசு மெல்ல முயன்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கொழும்பு நகரில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கு நறுமணம் சேர்க்கும் வகையில் 21 ஆயிரம் டன் உரம், இலங்கை மக்களுக்கான இந்தியாவின் சிறப்பு ஆதரவு திட்டத்தின் கீழ் இந்திய தூதர் முறைப்படி வழங்கியுள்ளார் என தெரிவித்து உள்ளது.
கடந்த மாதம் 44 ஆயிரம் டன் உரம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையும் சேர்த்து 2022-ம் ஆண்டில் மொத்தம் அமெரிக்க டாலர் மதிப்பில் 400 கோடி அளவுக்கு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த உரம் ஆனது, உணவு பாதுகாப்பு மற்றும் இலங்கையின் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதில் பங்கு வகிக்கும். இலங்கையில் நெருக்கடி முற்றியபோது, 57 லட்சம் மக்கள், மனிதநேய அடிப்படையிலான உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.