இந்திய தலைவர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்!

மத்திய அரசின் டாப் தலைவர் ஒருவரைக் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த தற்கொலைப் படை தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல வெளிநாடுகளில் இருந்த ஊடுருவல் முயற்சியும் நடந்து வருகிறது. இதனை எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தீவிரமாகக் கண்காணித்து முறியடித்து வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்திய மண்ணில் தாக்குதல் நடத்துவது தொடர்பான பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது ரஷ்யாவில் நடந்துள்ளது. இந்தியாவின் அரசில் முக்கிய இடத்தில் உள்ள அரசியல் தலைவரைக் குறித்து வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியைக் கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது. அவர் மத்திய ஆசியப் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்தவர். அவர் இந்தியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரைக் குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர் துருக்கியில் ஐ.எஸ்.ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார்” என்று ரஷ்யா பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஐஎஸ்ஐஸ் அமைப்பு இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஆபத்தான கருத்துகளைத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக சைபர்ஸ்பேஸ் இதுபோன்ற கருத்துகள் பரவுவதைச் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.