பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்: அன்புமணி

பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் கடந்த ஒரு மாத்திற்கு முன்னர் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயதி சிறுமியை ‘விளையாடலாம் வா’ என அழைத்த இளைஞன் ஒருவன் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதற்கு சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதை வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மீறி சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி சிறுமியின் உடைக்கு தீ வைத்துள்ளார். இதில் சிறுமி கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். 75% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு காரணமான இளைஞரை காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயிரிக்கு போராடி வரும் சிறுமிக்கு ரூ. 3 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், சிகிச்சை பெற்றுவந்த சிறுமி தற்போது உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்ததால் கொடியவன் ஒருவனால் தீயிட்டு எரிக்கப்பட்ட 7 வயது சிறுமி, ஒரு மாத உயிர்ப் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு அனுதாபங்கள். 7 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டலுக்கும், ஒரு மாதமாக துடிதுடித்து இப்போது உயிரிழந்திருப்பதற்கும் காரணம், அந்த சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்ததுதான்.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பழக்கம் முக்கிய காரணமாகும். பாலியல் குற்றங்களை செய்தால் தண்டனை பெறாமல் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் நிலவுவது தான் குற்றங்கள் பெருகுவதற்கு இன்னொரு காரணம் ஆகும். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டபேரவையில் 2022-2023ம் ஆண்டிற்கான ரூ.10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். இது அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலும் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

புதுவையில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும். அந்த வகையில் இது மகளிர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது மகளிர் உரிமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.