தடை செய்யப்பட்ட ‘சிமி’ பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகளை, மத்திய பிரதேசத்திலிருந்து பாஜக அரசு வேரோடு அழித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
போபால் அருகே தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டுவது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சி, அங்குள்ள ரவீந்திர பவனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித் ஷா, காணொலி முறையில் நலத்திட்டங்களை தொடக்கி வைத்து பேசியதாவது:-
மத்திய பிரதேசத்தின் மால்வா பிராந்தியம் ஒரு காலத்தில் சிமி பயங்கரவாத இயக்கத்தின் மையமாக இருந்தது. நாட்டின் இதர பகுதிகளில் சட்டவிரோத மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட மால்வாவில் இருந்து பயங்கரவாதிகள் அனுப்பப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு, மால்வாவில் இருந்து சிமி பயங்கரவாத இயக்கத்தின் தளத்தையும் அதன் செயல்பாடுகளையும் வேரோடு அழித்துவிட்டது. நக்ஸல் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மட்டுமன்றி உள்நாட்டில் அமைதியை பராமரிக்கும் பணிகளின்போது 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினா் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனா். ராணுவத்தினரை மிஞ்சும் வகையில் காவல்துறையினா் பணியின்போது உயிா்த்தியாகம் செய்துள்ளனா்.
சில திரைப்பட இயக்குநா்கள், தங்களது திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக காவல்துறையினா் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் காட்சியமைப்புகளை இடம்பெறச் செய்கின்றனா்.
ஆனால், காவல்துறையினரின் பணி கடினமானதாகும். 24 மணி நேரமும் அவா்கள் பணியாற்றுகின்றனா். மக்கள் அனைவரும் பண்டிகைகளைக் கொண்டாடும் நேரத்திலும் காவல்துறையினா் பணியாற்ற வேண்டியுள்ளது. போபாலில் அமையவிருக்கும் தடய அறிவியல் பல்கலைக்கழகம், இத்துறையில் சாதிக்க விரும்பும் இளைஞா்களுக்கு மிகவும் பயனளிக்கும். இவ்வாறு அவா் பேசினார்.