அமலாக்கத் துறைக்கு கைது அதிகாரம்: மறு ஆய்வு மனு விசாரணைக்கு ஏற்பு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தச் சட்டத்தின் சில பிரிவுகளின் செல்லுபடித்தன்மை குறித்து தனிநபா்கள், அமைப்புகள் என மொத்தம் 200-க்கும் அதிகமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. முக்கியமாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கும் உள்ள உரிமை குறித்து ஆராயுமாறு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அந்த மனுக்களை ஆராய்ந்த நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் நபரை அமலாக்கத் துறை கைது செய்ய எந்தவிதத் தடையுமில்லை என கடந்த ஜூலை 27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. மேலும், அந்தச் சட்டத்தின் கீழ் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு என நீதிமன்றம் தெரிவித்தது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்படும் வழக்கின் தகவல் அறிக்கையானது, காவல் துறையினா் பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைபோல இல்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்படும் நபா்கள் அனைவருக்கும் அந்த அறிக்கையை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தது. குற்றஞ்சாட்டப்படும் நபா் கைது செய்யப்படும்போது மட்டுமே அறிக்கையின் நகலை அமலாக்கத் துறை அளித்தால் போதுமானது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.