ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் 20 கோடி ரூபாய் தருவதாக அக்கட்சி மூத்தத் தலைவர்கள் ஆசை வார்த்தை கூறியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில், அண்மையில், மதுபானக் கொள்கை விதிமீறல் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்த வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முதல் நபராக சேர்க்கப்பட்டு உள்ளார். அவர், எந்நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால், சிபிஐ வழக்கை ரத்து செய்வதாகவும், அடுத்த தேர்தலில், பாஜக சார்பில், முதலமைச்சர் பதவி தருவதாகவும், அக்கட்சி தலைவர்கள் ஆசை வார்த்தைக் கூறியதாக, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
இந்நிலையில் இன்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. டெல்லி அரசை கவிழ்க்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன். ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை உடைக்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே மூலம் ஆட்சியை பிடித்தது போல், டெல்லியில், மணீஷ் சிசோடியா மூலம் பாஜக காய் நகர்த்தியது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி மற்றும் குல்தீப் ஆகியோரை பாஜக தலைவர்கள் அணுகி உள்ளனர். அவர்கள் கட்சியில் சேர்ந்தால் தலா 20 கோடி ரூபாயும், மற்ற எம்எல்ஏக்களை அவர்களுடன் அழைத்து வந்தால் 25 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். பாஜக என்ன சதித்திட்டம் தீட்டினாலும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கெஜ்ரிவால் கூறியதாவது:-
சில எம்.எல்.ஏ.,க்கள் என்னை சந்தித்தனர். அப்போது அவர்கள், தங்களுக்கு மிரட்டல் வருகிறது. கட்சியை உடைத்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறோம் என கூறுகின்றனர். இது முக்கியமான விஷயம். கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு ஆலோசனை நடத்த உள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரை சி.பி.ஐ., ரெய்டு தொடரும். விசாரணை நடத்தும் இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.