தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திமுக ஆட்சியில், சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். ஆனால், குற்றங்களை தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஆர்வமின்றி, விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், தமிழகம் முழுவதும் கொலைக் களமாக மாறி வருவது கண்டு மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் போலீஸ் துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது.

கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்று செய்திகள் வருகின்றன. இது மக்களை குலை நடுங்க செய்துள்ளது. இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன. கொல்லப்பட்ட ஒருசிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் துறையினர் அலட்சியமாக இருந்துள்ளனர். இது தான் முதல்வர் சட்டம் – ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? இந்த படுகொலைச் சம்பவங்களுக்கு போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக போலீசை ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்ட காலம் மாறி, திறமையற்ற துறையாக மாறி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு விழித்துக்கொண்டு சமுதாய சீர்கேடுகளை தடுத்து நிறுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.