திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பு வேலை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: அண்ணாமலை

அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக குற்றம்சாட்டும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திமுக.,வின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை பணியா எனவும் கேள்வி எழுப்பினார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் கோவை வந்தார். கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டப்பணிகள் துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவிற்கு மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்க முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

இன்று(நேற்று) கோவையிலும், ஆகஸ்ட் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். திமுக.,வின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.