கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப். 23க்கு ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 23க்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் நடைபெற்ற இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோடநாடு கொலை சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து கேரளாவை சேர்ந்த சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோடநாடு மேலாளர் நடராஜன், சசிகலா, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன், புதுச்சேரி சொகுசு விடுதி உரிமையாளர் நவீன்பாலாஜி என இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது, இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயான், வாளையார் மனோஜ், உதயன், ஜித்தன் ஜெய், ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கோடநாடு வழக்கில் கனகராஜின் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், தகவலை சேகரிக்க டிராயின் அனுமதி கேட்ட நிலையில், ஒத்துழைப்பு அளிக்கப்படாமல் உள்ளது என கூறப்பட்டது. மேலும், கோடநாடு கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 303 பேரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக கூடுதல் காட்சிகள் இடையே விசாரணை நடத்த அரசு தரப்பு சார்பில் நீதிபதியிடம் கால அவகாசம் கேட்கப்பட்டதால், இந்த வழக்கு விசாரணைய வரும் செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.