மக்களை வஞ்சிப்பது நோக்கமில்லை: அமைச்சர் எ.வ.வேலு

பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்தியாவில் முக்கிய விமான நிலையங்களில் ஒன்று சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட். உலகின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் சென்னையில் இருந்து நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகிறது. அதேபோல நேரம் தவறாமை தொடங்கிப் பல குறியீடுகளில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தலை சிறந்ததாகவே உள்ளது. இருந்த போதிலும், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்தே வருகிறது. இந்தியாவில் வரும் காலத்தில் விமான போக்குவரத்து வேகமாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை அதற்கு ஈடு கொடுக்கக் கூடியதாக இல்லை. இதன் காரணமாகச் சரக்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் நாட்டின் மற்ற விமான நிலையங்கள் உடன் மீனம்பாக்கம் விமான நிலையத்தால் போட்டிப் போட முடியவில்லை.

சென்னையில் நகருக்குள் விமான நிலையம் அமைந்துள்ளதால், அதை விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் உள்ளது. இதன் காரணமாகச் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிடப்பட்டது. பல ஆண்டுகளாகவே இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிர ஆலோசனைக்குப் பின்னர் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இப்போது உள்ள மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இருந்து சுமார் 59 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைகிறது. இருப்பினும், விமான நிலையம் அமைவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்தச் சூழலில் புதிய விமான நிலையம் அமைவது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் காரணமில்லை. இதில் பாதிக்கப்படும் அனைவருக்கும் மாற்று இடம் வழங்கப்படும். மேலும், வீடு கட்டவும் முழுமையாகப் பணம் வழங்கப்படும். விமான நிலையத்தை ஒட்டி இருக்கும் இடத்தில் தான் மாற்று இடங்களை வழங்குவோம். அதேபோல கிராமத்தினர் ஒரு பகுதியில் வசிக்கின்றனர் என்றால், ஒட்டுமொத்தமாக அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் ஒரே பகுதியில் தான் மாற்று இடம் வழங்கப்படும்.

தற்போதுள்ள மீனம்பாக்கம் ஏர்போட்டில் கடுமையான நெரிசல் உள்ளது. இதனால் தான் புதிய விமான நிலையத்தை அமைக்கிறோம். இதன் மூலம் சென்னையில் இருந்து நம்மால் அதிக சரக்குகளைக் கையாள முடியும். அதிக இடம் இருப்பதால் அதிகளவில் சரக்கைக் கையாள முடியும். சரக்கு போக்குவரத்தும் கூட மேம்படும். தமிழ்நாட்டிற்கு வரும் அந்நிய செலாணி மதிப்பும் கூட உயரும். இதனால் தமிழக பொருளாதாரமும் கூட நன்கு மேம்படும்.

மீனம்பாக்கம் ஏர்போர்ட் காரணமாகத் தலைநகர் சென்னையிலும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் 15 நிமிடத்தில் போக வேண்டிய இடங்களுக்குக் கூட சென்று சேர 1.30 மணி நேரம் வரை ஆகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவே புதிய விமான நிலையத்தை ஏற்படுத்துகிறோம். விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கம் எதுவும் அரசுக்கு இல்லை. விமான நிலையத்திற்கு இடங்களை வழங்குவோர் மன நிறைவு பெறும் அளவுக்கு முடிந்த அளவு அனைத்து உதவியும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், “திமுக சாலை போட எதிரி இல்லை. ஆனால் திட்டங்களுக்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விவசாயிகளை அழைத்துப் பேசி மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றே கூறினோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வரும் அதையே தான் கூறினார். விமான நிலையத்தைப் பொறுத்தவரை மொத்தம் 13 கிராமங்களும் 1005 வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இதில் அனைவருக்கும் 3.5 மடங்கு மதிப்பில் இழப்பீடு வழங்கப்படும். அதேபோல மாற்று இடம் வழங்கி வீடு கட்ட பணமும் வழங்கப்படும். இவை தவிர அங்குள்ள அனைத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தகுதி அடிப்படையில் வேலை கண்டிப்பாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.