ஆப்கனில் 2.3 கோடி இணையதளங்களை தலிபான் அரசு முடக்கியுள்ளது!

ஆப்கானிஸ்தானில் 2.3 கோடிக்கும் அதிகமான இணையதளங்களை தலிபான் அரசு முடக்கியுள்ளது.

ஆப்கனில் தலிபான் அரசு பொறுப்பேற்று ஆகஸ்ட் மாதத்துடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, குறிப்பாக பெண்களின் கல்வி, வேலை, அவர்கள் வெளியில் செல்ல கட்டுப்பாடுகள் என பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அதுபோல ஊடகங்கள், இணையத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த ஒரு ஆண்டில் ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தியதாகக் கூறி 2.3 கோடிக்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் நஜிபுல்லா ஹக்கானி தெரிவித்தார்.

‘நாங்கள் இதுவரை 2.34 கோடி இணையதளங்களை முடக்கியுள்ளோம். ஒன்றைத் தடுக்கும்போது அவர்கள் வேறு ஒரு பெயரில் இணையதளத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால், ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தும் இணையதளங்கள் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது’ என்றார். மேலும் இது போன்ற இணையதளங்களை ஒடுக்க, பேஸ்புக் ஒத்துழைக்க தயக்கம் காட்டுவதாகவும் விமர்சித்தார்.