தமிழருக்கு வாய்ப்பளிக்காத என்எல்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை: அன்புமணி

கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக ஆக்கி வரும் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு துரோகம் செய்து வருவதாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் அன்புமணி பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 66 ஆண்டு காலமாக இந்த மண்ணையும், மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து நிலத்தடி நீரை உறிஞ்சி கடலில் அனுப்பி, கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக என்.எல்.சி நிறுவனம் மாற்றிக் கொண்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு 8 அடி இருந்த நிலத்தடி நீர், தற்போது ஆயிரம் அடிக்கு கீழே சென்றுள்ளது. அதற்கு முழு காரணம் என்.எல்.சி. நிறுவனம்தான். என்.எல்.சி நிறுவனம் தேவை இல்லை ராட்சத பம்புகளை வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி, கடலுக்கு அனுப்பும் தீய செயலில் ஈடுபட்டு வருகிறது. 66 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்த மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலை இல்லை. அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. இன்னும் கூடுதலாக 27 ஆயிரம் ஏக்கர் நிலங்களை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

என்.எல்.சி. நிறுவனத்தில், தமிழக அரக்கு 4 சதவீதம் பங்கு உள்ளது. இப்படி இருந்தும் கடலூர் மாவட்ட மக்களின் உரிமைகளை காக்கத் தமிழக அரசு தவறி விட்டது. இதற்காக தமிழக அரசை கண்டிக்கிறோம். என்.எல்.சி. நிறுவனத்தில் அண்மையில் 299 பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கூட தமிழர் கிடையாது. 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் என்.எல்.சி நிறுவனம் சரியா வேலை வழங்கவில்லை. மக்களுக்கு தொடர்ந்து துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. என்.எல்.சி நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம். ராணுவத்தையே கூட்டி வந்தாலும் என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம். இது வெறும் அடையாள போராட்டம்தான். இனி மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் என்.எல்.சி நிறுனத்திற்கு எதிராக செயல்படுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது மாதிரி பூட்டு ஒன்றை பாமக தொண்டர்கள் கூட்டத்தின் இடையே எடுத்து வந்தனர் அதனை பார்த்த அன்புமணி ராமதாஸ் இது எச்சரிக்கை போட்டு தான் அடுத்து உண்மையான பூட்டை எடுத்து வந்து எல்லா கேட்டையும் பூட்டி விடுவோம் பார்த்துக்கோங்க என எச்சரிக்கை விடுத்தார்.