ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்து விட்டால், விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்: சரத்குமார்

ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்து விட்டால், அதை விளம்பரப்படுத்த முடியாது; நானும் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்; அவர்கள் மூடிவிட்டுச் சென்று விடுவர் என, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

திருச்சியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற சரத்குமார், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடிக்கிறீர்களே…’ என நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை முதலில் அரசிடம் கேளுங்கள். அதன் பின், நான் நடிப்பது பற்றி என்னிடம் கேளுங்கள். ஆன்லைன் ரம்மியை நிறுத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் இப்போது சொல்கின்றன. ஆனால், ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் சூதாட்டம் பல விதத்தில் மக்களுக்கு பாதிப்பு என முதலில் இருந்தே கூறி வருகிறேன். ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் விளம்பரத்தை கட்டுப்படுத்துவது அரசு தான். எனவே, அரசு முடிவு எடுத்து, ஆன்லைன் ரம்மியை தடை செய்து விட்டால், தடை செய்யப்பட்ட அதற்கு நான் எப்படி விளம்பரத்தில் நடிப்பேன்? ஆன்லைனில் ரம்மி ஆட்டம் மட்டும் அல்ல; கிரிக்கெட் உள்ளிட்ட எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளன. அதுவும் சூதாட்டம் தான். இதை எல்லாம் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால் தான் இதிலிருந்து எல்லாரும் விடுபடுவர்.

குடிப்பழக்கம், குடியை கெடுக்கும். ஆனால் குடிக்காமல் இருக்கின்றனரா? குடிக்காதீர்கள் என நானும் தொடர்ந்து கூறி வருகிறேன். அதுபோல, புகைப்பிடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு; அதை தயாரிப்பதை அரசு ஏன் நிறுத்தவில்லை? எனவே, உலகத்தில் எல்லாமே இருக்கிறது; மக்கள் அதை பார்த்து கெட்டுப் போகாதீர்கள், மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். நல்லவையும் இருக்கின்றன; தீயவையும் இருக்கின்றன. நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்; தீயவற்றை விட்டு விடுங்கள் என்று சொல்கிறேன். நாம் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் அவர்கள் கடையை மூடிவிட்டு போய்விடுவர். இவ்வாறு அவர் கூறினார்.