ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் ஹேமந் சோரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாக குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரன் மீது நடவடிக்கை எடுக்க மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்து. இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம் என நிலை உருவாகியுள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் இன்று மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் சோரன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சட்டப்பேரவையில் சோரனுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோரன், பாஜக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்ததுள்ளார். ஆட்சி கவிழ்ப்பு செய்ய பாஜக முயற்சி செய்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை அழித்துவிட்டன. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சட்டப்பேரவையில் எங்கள் பலத்தை நாங்கள் நிரூபிப்போம். உடைகள், ரேஷன், மளிகை பொருட்கள் வாங்குவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பாஜக மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குகிறது.” என நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக சட்டப்பேரவையில் சோரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இம்மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில், 41 எம்எல்ஏக்களை கொண்டுள்ள கட்சி ஆட்சியமைக்கும். இந்நிலையில், தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு 49 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. இதில் 30 எம்எல்ஏக்கள் முக்தி மோர்ச்சா கட்சியை சார்ந்தவர்கள். 18 பேர் காங்கிரசும், ஒரு எம்எல்ஏ தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்தவர் ஆவார்.
முன்னதாக தேர்தல் ஆணையம் சோரன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்த நிலையில், மாநிலத்தில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிப்பதாக கூறி, 49 எம்எல்ஏக்களையும் வேறு மாநிலத்தில் இருக்கும் சொகுசு விடுதிகளுக்கு சோரன் மாற்றினார். இந்நிலையில் இவர்கள் நேற்று காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மாநில தலைநகர் ராஞ்சிக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இன்று காலை சட்டப்பேரவைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இன்று அவர் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது. மொத்தம் 48 எம்எல்ஏக்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்தது. மொத்தம் 48 எம்எல்ஏக்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். மொத்தமாக காங்கிரஸ் 18 எம்எல்ஏக்கள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 29 எம்எல்ஏக்கள் (சபாநாயகர் தவிர்த்து), ஆர்ஜெடி எம்எல்ஏ ஒருவர் என்று 48 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்தது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்த பின், முதல்வர் ஹேமந்த சோரன் பாஜகவை தாக்கி கடுமையாக பேசினார். இந்தியாவை அலங்கோலமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது பாஜக. ஒரு சிலருக்காக மட்டும் பாஜக ஆட்சி செய்து வருகிறது. சில வியாபாரிகளுக்காக ஆட்சி செய்து வருகிறது பாஜக. குதிரை பேரங்கள் மூலம் பாஜக ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறது. மக்கள் வாக்களித்து வெற்றிபெற முடியாத பாஜக குறுக்கு வழியில் குதிரை பேரம் மூலம் ஆட்சிக்கு வர பார்க்கிறது, என்று பேசினார். இதை எதிர்த்து பாஜக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.