மாணவிகள் கல்லூரிகளில் படிக்க காரணம் திராவிடர் இயக்கம்:முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிகளில் படிக்க காரணமாக இருந்தது திராவிடர் இயக்கம்தான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார்.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பது தமிழக அரசின் அறிவிப்பு. இதற்காக ரூ698 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு புதுமைப் பெண் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த புதுமைப் பெண் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற இப்புதுமைப் பெண் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரி பள்ளிகளையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களின் கல்வியில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு குறித்து பேசியதாவது:-

கல்வி என்ற நீரோடை ஏழை, பணக்காரன் உயர்ந்தவர்- தாழ்ந்தவர், உயர்ந்த ஜாதி- தாழ்த்தப்பட்ட ஜாதி; கிராமம்- நகரம் என்ற மாறுபாடும் வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 100 ஆண்டுகளுகு முன்னர் உருவானதுதான் நீதிக்கட்சி. திராவிடர் இயக்கத்தின் அடிப்படை கொள்கையே இதுதான். உயர்ந்த ஜாதியை சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும்; அதுவும் ஆண்கள் மட்டும் படிக்க முடியும் என்கிற நிலைமை இருந்தது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டையும் பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சிதான். அந்த சமூக நீதியை அரசியல் ரீதியாக காப்பாற்றியவர் தந்தை பெரியார். அந்த சமூக நீதியை ஆட்சி ரீதியாக காத்தவர்கள் பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதி. அவர்களது வழித்தடத்தில் நமது திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது. இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிகளில் படிப்பதற்கு காரணம் திராவிடர் இயக்கம்தான். திராவிடர் இயக்கத்தின் பெண்ணுரிமைப் போராட்டங்களால் விளைந்த பயன் இது.

1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாகாண மாநாட்டை இந்த நிகழ்ச்சியில் நினைவு கூறுவது மிகவும் முக்கியமானது. அந்த மாநாட்டில்தான் பெண்களுக்கு சொத்துரிமை, பணி உரிமை, மறுமணம், தங்களுக்கு தாங்களே இணையரை பெண்கள் தேர்வு செய்யலாம் என பல புரட்சிகரமான பெண்ணுரிமைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட மாநாடுதான் அந்த மாநாடு. அதன் நீட்சியாகவே. 1989-ம் ஆண்டு அதாவது சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியவர் கருணாநிதி. ஆண்களும் மட்டுமல்ல பெண்களும் படிக்கலாம். பெண்கள் படித்தே ஆக வேன்டும் என்ற நிலைமை உருவாக்கியது திராவிட இயக்கம். அதன்வழியே திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 1 லட்சம் மாணவிகளுக்கு முதற்கட்டமாக வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ 1000 செலுத்தப்படும். கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல துடிக்கும் மாணவிகளுக்கு தந்தையின் பேரன்போடு என்றும் துணை நிற்பேன். மகள்களை படிக்க வைக்க காசு இல்லையே என பெற்றோர் கவலை கொள்ள கூடாது. சென்னை ராயபுரம் பாரதி கல்லூரியை 3 அடுக்கு கட்டடமாக கட்ட உத்தரவிட்டுள்ளேன். இந்த திட்டத்தின் மூலம் குழந்தைத் திருமணங்கள் குறைந்து மாணவிகள் உயர் கல்வி படிப்பது அதிகரிக்கும். தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ 150 கோடியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். இவரை கல்லூரியின் வாசலுக்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகளை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் புரட்சிகரமான திட்டம். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முன்னோடி திட்டமாக விளங்க போகிறது. மார்ச் மாதத்தில் டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலின், அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க வேண்டும் என்று கூறினார். பெண் கல்வி எனக்கு வியப்பாக இருந்தது. அதன்பின்னர் அவரை அழைத்துக்கொண்டு, அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க அழைத்து சென்றேன். இந்தியாவில் பலர் வறுமையால் உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக அறிவார்ந்த பெண்கள் வறுமையாக் உயர்கல்வியை கைவிடுகின்றனர். நாட்டில் 27 கோடி மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். அதில் 18 கோடி மாணவிகள் அரசுப் பள்ளிகளுக்கு செல்கின்றனர். ஆனால் அவர்களில் உயர்கல்விக்கு செல்வோர் மிகவும் குறைவு. அரசுப் பள்ளிகள் நம் நாட்டில் உள்ள 66 சதவிகித அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளது. பிறகு எப்படி இந்தியா முன்னேறிய நாடாக மாறும்.

நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு தரமான, இலவசமான கல்வியை வழங்குவது தான் அரசின் முதல் கடமை. கடந்த 75 ஆண்டுகளில் கல்வியின் தரத்தில் சரியாக கவனம் செலுத்தவில்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், 5 ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வியை நம்மால் கொடுக்க முடியும். ஒரு சில மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 கட்டணமாக பெறப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களால் எப்படி இந்த கட்டணத்தை கட்ட முடியும். ஏழை மாணவர்கள் கல்விக்காக எங்கு செல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை அழைத்ததற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.