டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இன்று சந்தித்துப் பேசினார்.
பாஜக ஆதரவுடன் பிகார் முதல்வா் பதவியை வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், அண்மையில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். தொடர்ந்து, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக பிகார் முதல்வர் நிதீஷ் குமாா் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
டெல்லி புறப்படுவதற்கு முன்பு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேசிய தலைவா் லாலு பிரசாதை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார் நிதீஷ் குமாா். தொடா்ந்து மதசாா்பற்ற ஜனதா தளம் தலைவா் ஹெச்.டி.குமாரசாமி, ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்தார்.
இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை தில்லியில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ், ‘சரத்பவாருடனான உரையாடல் நன்றாக இருந்தது. பாஜக எந்த வேலையும் செய்வதில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருப்பது முக்கியம். பெரும்பாலான எதிர்ப்புகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால் அது நாட்டின் நலன் சார்ந்ததாக இருக்கும்’ என்றார்.