திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து அர்ஜூன் சம்பத் கைது!

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்தியாவின் ஒற்றுமை(bharat jodo yatra) என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் தொடங்குகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி. இதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர். தேசிய அளவிலான இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,600 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்திற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்திவிட்டு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கன்னியாகுமரி வருகிறார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் #GoBackRahul என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், “எது நடப்பினும் நாளை தமிழகம் வரும் தமிழின துரோகி ராகுலுக்கு கருப்பு கொடி இந்து மக்கள் கட்சி காட்டுவது உறுதி” என்று பதிவிட்டிருந்தார்.

அதோடு, கன்னியாகுமரி யாத்திரை தொடங்கும் பகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட திட்டமிட்ட அர்ஜூன் சம்பத், கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் குமரி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காத்திருந்த போலீசார் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரது உதவியாளர்கள் அரிகரன், பொன்னுசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.