வெறுப்பு அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன். ஆனால் என் நாட்டை இழக்க மாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும் தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.
இதில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி டெல்லியிலிருந்து விமானத்தில் நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸார் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரவு சென்னை தனியார் ஹோட்டலில் தங்கிய ராகுல் இன்று காலை 6 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்றிருந்தார். அங்கு தனது தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து ராஜீவ் காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் தனது தந்தையுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி உரையாடினார்.
இந்த நிலையில் தனது தந்தையின் சமாதியில் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாத அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன். ஆனால் எனது நாட்டை இழக்க மாட்டேன். வெறுப்புணர்வை அன்பு வெல்லும். பயத்தை நம்பிக்கை வீழ்த்தும். இரண்டும் இருந்தால் எந்த பிரச்சினையையும் சமாளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் ராகுல், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி செல்கிறார். மாலை 4 மணிக்கு விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார். காந்தி மண்டபத்தின் நுழைவுவாயிலில் இந்த யாத்திரையை ராகுல் காந்தி தொடங்குகிறார்.