காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பிருந்து பாதயாத்திரை தொடங்குகிறது. நிகழ்ச்சி தொடக்க விழாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில முதல்-அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட எல்லையான காவல்கிணறில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை, கட்டியணைத்து வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் ராகுல் காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடைபெற்ற இசையஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார். தொடர்ந்து, ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். நடைப் பயணத்தைத் தொடக்கி வைக்கும் விதமாக அவர் தேசியக் கொடியை ராகுலிடம் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-
அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மூன்று சமுத்திரமும் சங்கமிக்கும் இந்த இடத்தில் தேச ஒற்றுமைக்கான பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? நாட்டு மக்கள் ஒற்றுமையை வலியுறுத்த காங்கிரஸ் கட்சிக்கு அவசியம் என்ன? நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்று மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். மூவர்ணக் கொடியை நாம் பார்க்கும் போது மரியாதை செலுத்துகிறோம். சிலர் மூவர்ணக் கொடியை சக்கர படம் போட்ட சாதாரண துணியாக கருதலாம். ஆனால் மூவர்ணக் கொடி என்பது சாதாரண துணி அல்ல. தேசியக் கொடியை கையில் ஏந்த நாம் நீண்ட நெடிய போராட்டத்தை சந்தித்துள்ளோம். நமது தேசியக் கொடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களின் உணர்வுகளையும் பிரபலிக்கிறது.
மூவர்ணக் கொடி யாரோ சிலருக்கு மட்டும் சொந்தமானதல்ல; நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. தேசியக் கொடி என்பது இந்தியர்கள் ஒவ்வொருவரின் அடையாளம். நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் உரிமையையும் உறுதிப்படுத்துவது தேசியக் கொடி. ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் மொழி, கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கான உரிமையை தேசியக் கொடி வழங்குகிறது. இன்று நமது தேசியக் கொடியே ஆபத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளும், ஒவ்வொரு ஊடகமும் தேசியக் கொடியை பாதுகாக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவற்றால் தேசியக் கொடியே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. நாட்டின் எதிர்காலத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே தீர்மானிக்கும் என்று நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளால் பணிய வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற மிரட்டல்களுக்கு இந்தியர்கள் அஞ்ச மாட்டார்கள் என்பது பாஜகவுக்கு தெரியவில்லை. விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை அடைத்து வைத்து அச்சுறுத்தலாம் என கருதுகிறார்கள். அதேபோல் இந்தியாவை மதம், மொழி ஆகியவற்றால் பிளவுபடுத்திவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இந்தியாவை மதம் மற்றும் மொழி ரீதியாக பாஜகவால் பிளவுபடுத்த முடியாது.
இந்தியாவின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திட்டாட்டம் ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த செய்திகளை தொலைக்காட்சிகளில் காட்டுவதில்லை. பெரும்பாலான ஊடகங்கள் மக்களின் பிரச்னைகளை ஊடகங்களில் காட்டுவதில்லை. பிரதமரின் முகத்தை மட்டுமே ஊடகங்கள் காட்டி வருகின்றன. தினந்தோறும் பிரதமர் மட்டுமே தொலைக்காட்சிகளில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி செய்து வருகிறார்,. தொழிலதிபர்களின் தயவு இல்லாமல் மோடியால் ஆட்சியில் நீடிக்க முடியாது. அவர்களுக்கு தேவையான திட்டங்களை மட்டுமே நிறைவேற்றுவார். இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியை போன்றே மோடியின் ஆட்சியும் நடக்கிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.