இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. புதிய அறிக்கை!

இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், வரும், 23ம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல் நடந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.புலிகள் அமைப்புக்கு எதிராக, 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்து, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், 2013ல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. சர்வதேச விசாரணைக் குழுவின் விசாரணைக்கு இலங்கை அரசு மறுத்தது. இதுபோல, 2015லும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, சுயமாக விசாரணை நடத்துவதாக, இலங்கை அரசு அறிவித்தது. இதை நிராகரித்து, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் 2021ல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, 22 ஓட்டுகளும், எதிராக, சீனா உட்பட, 11 நாடுகளும் ஓட்டளித்தன. இந்தியா உட்பட, 14 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலின் கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், வரும், 12 முதல் அக்., 7ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல் தொடர்பான வரைவு தீர்மானம், வரும், 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மீது, அக்., 6ல் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் தொடர்பாக, ஐ.நா., புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

உள்நாட்டு போரின் போது நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெறாமல் இலங்கை தப்பியது தான் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணம். கடந்த கால, நிகழ்கால மனித உரிமை மீறல்களுக்கு தண்டனையில் இருந்து இலங்கை தப்பிய செயல், பொருளாதார குற்றங்கள், ஊழல் ஆகியவை தான் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணங்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சவால்களை சமாளிக்க அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நடைபெறாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. அறிவுறுத்தியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு கடுமையான பாதுகாப்பு சட்டங்களை சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும், அமைதியான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது, ராணுவ நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை, பொருளாதார நெருக்கடியுடன் முதல் முறையாக ஐ.நா. தொடர்புபடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.