நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் அதிக கல்வி நிறுவனங்கள் முதன்முதலாக உருவானது நெல்லையில் தான். 1973ல் நெல்லையில் ஈரடுக்கு பாலத்தை அமைத்து கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். கடந்த ஓராண்டில் நெல்லை மாவட்டத்திற்கு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 25 தரிசு நிலத் தொகுப்புகள் விளைநிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலவச பயண திட்டத்தின் கீழ் நெல்லையில் மட்டும் 6.92 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். நெல்லையில் 9 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தரப்பட்டுள்ளது. 28 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொருநை நாகரிகத்தின் பெருமையை கூறும் வகையில் நெல்லை பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்காக கிராமப்புறங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மணிமுத்தாறு அணை அருகே ரூ.7 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பூங்கா அமைக்கப்படும். ரூ.370 கோடியில் புறவழிச்சாலை 3 கட்டங்களாக அமைக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டங்களுக்கு செல்லும் போது, தனித்தன்மையுடன் வளர்ச்சியடைந்து வருவதை நான் பார்க்கிறேன். அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சியடைவது தான் சீரான வளர்ச்சி. என்னைப் பொறுத்தவரை பின் தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கக் கூடாது. ஆகையால் தான், நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளை கொடுக்க அறிவுறுத்தி, அதனை உங்கம் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் மூலம் தீர்க்க உத்தரவிட்டுள்ளேன்.
தமிழ்நாடு வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி திட்டம் என்று பாராட்டியுள்ளார். அதுபோல் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டங்களாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள நவீன மாதிரிப் பள்ளிகளை பார்வையிட்டேன். அப்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம், தமிழ்நாட்டிலும் இதுபோன்ற பள்ளிகளை தொடங்கவுள்ளோம். நீங்கள் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் இரண்டு ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை 6 மாதத்தில் முடித்து காட்டியுள்ளோம். அதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.