அனைத்து தற்காலிக அரசு ஊழியர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்: முதல்வர்

அனைத்து வகையான தற்காலிக ஆசிரியர்களும், பிற தற்காலிக பணியாளர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் இன்று சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்த மாநாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. இந்த மாநாட்டில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் காரணம். அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நினைத்தாலும், அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசாமல் வேறு எங்கே பேசுவது என்பது எனது எண்ணமாக அமைந்திருக்கிறது. அரசும் அரசியலும் இரண்டற கலந்தது, இதை யாராலும் பிரிக்க முடியாது. அந்த உணர்வோடு நான் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். நானும் உங்களில் ஒருவன். நீங்கள் அரசு ஊழியர், நான் மக்கள் ஊழியன். அரசு ஊழியர்களின் நம்பிக்கைக்கு எப்போதும் பாத்திரமாக இருப்பேன். இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆட்சி. அதனால் எப்போதும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பேன்.

கடந்த 10 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பட்ட கஷ்டத்தை 15 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள இந்த அரசு படிப்படியாக போக்கும். கையெழுத்து போட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின். நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகள் சார்ந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்து விட்டுத்தான் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறேன்.

தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் இனி நியமிக்கப்படுவார்கள். அனைத்து வகையான தற்காலிக ஆசிரியர்களும், பிற தற்காலிக பணியாளர்களும் 60 வயது வரை பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அக்டோபர் 15ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் வெளிப்படையாக நடக்கும். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது. கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசு கருவூலத்தில் பல்லாயிரம் கோடிக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு அல்ல. நான் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இருந்தால் போதும். இவ்வாறு அவர் பேசினார்.