ரிசர்வ் வங்கி, சட்டப்பூர்வ செயலிகள் தொடர்பாக ஒரு பட்டியலை தயாரிக்க உள்ளது. ட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு முடிவு.
சட்டவிரோத கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவோர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ள நிலையில், நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதித்துறை அமைச்சகத்தின் நிதி செயலாளர், பொருளாதார விவகார செயலாளர் மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், சட்டவிரோத கடன் செயலிகளால் ஏற்படும் பாதிப்புகள், கடன் அட்டைகளின் தாக்கம் குறித்து பேசப்பட்டது. அதிக வட்டி, பண மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத கடன் செயலியை ஆப் ஸ்டோரிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி, சட்டப்பூர்வ செயலிகள் தொடர்பாக ஒரு பட்டியலை (ஒயிட் லிஸ்ட்) தயாரிக்க உள்ளது. அந்த செயலிகள் மட்டும்தான் ஆப் ஸ்டோரில் இருக்கும். சட்டவிரோத செயல்கள் எதுவும் ஆப் ஸ்டோரில் இருக்காது. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயலிகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சட்டவிரோத கடன் செயலிகள் மூலமாக பொதுமக்கள் கடன் பெற்று பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. வறுமையின் காரணமாக பொதுமக்கள் இதுபோன்ற கடன் செயலிகளை பயன்படுத்தி ஆதார் அட்டையை வைத்து கடன் வாங்குகிறார்கள். பின்னர் வட்டி அதிகம் இருப்பதால் கடனை செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். கடனை செலுத்தாவிட்டால், கடன் வாங்கியவரின் படங்களை மோசமாக சித்தரித்து மிரட்டி வசூலிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் கடன் வாங்கியவர்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்யும் அளவுக்கு போகின்றனர். இதுபோன்ற கடன் மோசடிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுப்பதாக தெரிவித்துள்ளது.