மாணவர்களை சவால்களை எதிர்கொள்ள செய்ய வேண்டும்: அண்ணாமலை

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள செய்வதுதான் அரசின் கடமை என்றும், நீட் தேர்வில் மாணவர்களை பலவீனப்படுத்துவது அரசுக்கு அழகல்ல என்று பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக முயற்சி செய்து சிலர் தேர்ச்சி பெறாமல் போயிருக்கலாம். அதனால் நீங்கள் கற்றது வீண்போகாது, மீண்டும் முயற்சியுங்கள், வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுங்கள். நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கடந்த ஆண்டு 99 ஆயிரத்து 610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது. நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மற்ற தேர்வுகளை போல சுலபமாக எதிர்கொள்ள தொடங்கிவிட்டதற்கான சான்று இதுவே. தேர்வு எழுதிய மாணவர்களில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களைவிட இந்த ஆண்டு 10 ஆயிரத்து 572 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிராமப்புற ஏழை-எளிய மாணவர்கள் வேறு வழியில்லாமல் நீட் தேர்வு எழுதி வருகின்றனர் என்பது போன்ற உண்மைக்கு புறம்பான தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறுவது மாணவர்களை சிறுமைப்படுத்துவது போன்றது ஆகும். மக்களை திசை திருப்புவது, உதாசீனப்படுத்துவது, சிறுமைப்படுத்துவதுதான் தி.மு.க. அமைச்சர்கள் ஆட்சிக்கு வந்தநாள் முதல் மறவாமல் செய்யும் ஒரே பணி. ஒரு அரசின் கடமை மாணவர்களை தயார்ப்படுத்தி அவர்களை எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள செய்வதுதானே தவிர, அவர்களை பலவீனப்படுத்துவது ஒரு அரசுக்கு அழகல்ல. தி.மு.க. தொடர்ச்சியாக மாணவர்களை பலவீனப்படுத்தி வருவதை இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீட் பயிற்சியை பொருட்படுத்தாமல் பல அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். தேர்ச்சி விகிதத்தை தமிழகத்துடன் ஒப்பிடுகையில், கேரளா, ஆந்திரா, குஜராத் மற்றும் கர்நாடகா மாநில மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அந்த மாநில அரசு இதற்காக எடுத்துவரும் முயற்சிகளை அறிந்து அதை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும். அதனுடன் கைவிடப்பட்ட இ-பாக்ஸ் முறையை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். மேலும் சமூகநீதி மற்றும் சம உரிமைக்கு எதிராக செயல்பட்டு அரசு பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதை தி.மு.க. அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.