தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு உரியதுறையிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதற்கான அவகாசத்தை வழங்கி வழக்கை இரண்டு வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடகோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு கடந்த 2-ந்தேதி விசாரணைக்கு வந்த போது இவ்விவகாரம் தொடர்பாக உரிய உத்தரவுகளை மத்திய அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் கே.கே. ரமேஷ் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும், அதே வேளையில் விசாரணையை நேற்றைய தினத்துக்கு ஒத்தி வைத்திருந்தனர்.
இவ்வழக்கு நீதிபதி அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கபட்டனரா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், இதுவரை 86 மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை எனவும் தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்கிறது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கையை வைத்தனர். அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை வரம்புக்குள் வருமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், இந்திய கடல் எல்லைக்குள்ளாக இந்த சம்பவங்கள் நடப்பதால் சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட முடியும் என தெரிவித்தார்.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் உரிய தரவுகளுடன் பதிலளிக்க வேண்டியுள்ளது. எனவே அது தொடர்பாக உரிய துறையிடம் கேட்டு தெரிவிக்கிறோம் என கூறினார். இதனைதொடர்ந்து நீதிபதிகள், மத்திய அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்கப்படுவதாக கூறி, இந்திய மீனவர்கள் எத்தனை பேர் இலங்கை சிறையில் உள்ளனர்? எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து, மத்திய அரசு தரப்பு உரியதுறையிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதற்கான அவகாசத்தை வழங்கி வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.