பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது: சீமான் கண்டனம்

மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை காவல்துறையினர் கைது செய்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை சனநாயக உரிமையான கருத்து சுதந்திரத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள இக்கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

இதுவரை இல்லாத நடைமுறையாக, வழக்குக்குறித்து புலனாய்வுசெய்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரைக் கைதுசெய்வதும், அதுகுறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடைவிதிப்பதுமான போக்குகள் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். ஸ்ரீமதி மரணத்தில் புலப்படாதிருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்டக் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத்தரக் கோரியுமாக இயங்கி வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் ஏற்கவே முடியாத சனநாயகப் படுகொலையாகும்.
ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டுக் கருத்துப்பரப்புரை செய்த, போராடிய இளைஞர்களைக் கைதுசெய்து சிறையிலடைப்பதும், இதுகுறித்துப் பேசவிடாது ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிப்பதுமான திமுக அரசின் அதீதச்செயல்பாடுகள் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. யாரைக் காப்பாற்றுவதற்காக எல்லோரையும் பேசவிடாது, நெருக்கடி கொடுத்து இவ்வாறு முடக்குகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மீதான கைது நடவடிக்கையைக் கைவிட்டு, அவரை எவ்வித வழக்குமின்றி விடுவிக்க வேண்டுமெனவும், கருத்து சுதந்திரத்திற்கெதிரான இக்கொடுங்கோல் போக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.