டெல்லியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமனியன் சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி அரசின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. ஆனால் தமது உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறது எனக் கூறி பாதுகாப்பு பெற்றவர். அவருக்கு 40 சிஆர்பிப் வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். இதனை சுட்டிக்காட்டி 40 சிஆர்பிஎப் வீரர்கள் தங்குவதற்கு தற்போதைய வீடு வசதியாக இல்லை; அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரினார் சுப்பிரமணியன் சுவாமி. இதனை ஏற்று மத்திய பாஜக அரசு 2016-ம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவரது பதவி காலம் முடிவடையும் 5 ஆண்டுகாலத்துக்கு இந்த அரசு பங்களாவை பயன்படுத்தலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
பாஜகவிடம் ராஜ்யசபா எம்.பி. பதவி பெற்றுக் கொண்டு அரசு பங்களா வசதி, பாதுகாப்பு வசதிகளையும் அனுபவித்துக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக பாஜகவின் நிதி அமைச்சர்களை எதிர்க்கட்சிகளைவிட படு மோசமாக விமர்சித்தார். அவரது விமர்சனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர், பொருளாதார ஆலோசகர் என அனைவரும் தப்பியவர்களும் இல்லை.
இந்நிலையில் அண்மையில் சுப்பிரமணியன் சுவாமியின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் முடிவடைந்து. பாஜகவிலும் வேறு எந்த பொறுப்பும் அவருக்கு தரப்படவில்லை. அவரது நெருங்கிய சகாவான, சந்திரலேகாவுக்கு தமிழக பாஜக தலைவர் பதவி தர வேண்டும் என எதிர்பார்த்தார் சுப்பிரமணியன் சுவாமி. இது எதுவும் நடக்காத நிலையில் சு.சுவாமி பாஜகவிடம் இருந்து விலகி எதிர்க்கட்சிகளோடு ஐக்கியமானார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை சந்தித்து பேசினார் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் திரிணாமுல் காங்கிரஸில் சுப்பிரமணியன் சுவாமி இணையப் போவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் அரசு பங்களாவை சுப்பிரமணியன் சுவாமி காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, தமது உயிருக்கு அச்சுறுத்தல் தொடருகிறது; அதனால் அரசு பங்களாவிலேயே தங்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதற்கு மத்திய பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சுப்பிரமணியன் சுவாமி, அரசு பங்களாவை காலி செய்தால்தான் இதர அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு பங்களா ஒதுக்கீடு செய்ய முடியும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இதனை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம், 6 வாரங்களுக்குள் டெல்லி பங்களாவை அரசிடம் ஒப்படைக்க சுப்பிரமணியன் சுவாமிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.