இந்தியாவின் ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை பிரதமர் சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார்: ராகுல்

இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை, எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் என குற்றம்சாட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அந்த நிலத்தை எப்படி மீட்கப்படும் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில், 2020 மே மாதத்தில் சீனப் படைகள் அத்துமீற முயன்றன. இதனால் பாங்காக் ஏரி பகுதியில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எல்லையில் இந்திய, சீனப் படைகள் குவிக்கப்பட்டன. பல சுற்று பேச்சுகளுக்குப் பின், எல்லையில், 15ம் எண் ரோந்து பகுதிகளான, காக்ரா, ஹாட்ஸ்பிரிங்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த 8ம் தேதி துவங்கிய இந்தப் பணி, 12ம் தேதிக்குள் முடியும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

எல்லையில் 2020 ஏப்.,க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க சீனா மறுத்துவிட்டது. எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை சீனாவிடம் நரேந்திர மோடி வழங்கிவிட்டார். இந்த நிலப்பகுதி எப்படி மீட்கப்படும் என்று மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ராகுலின் நடைபயணம் 4 நாட்கள் நடந்தது. கடந்த 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி மற்றும் குழுவினர் நேற்று காலை 7.30 மணிக்கு கல்லம்பலத்தில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினர். முதல் நிகழ்ச்சியாக பாதயாத்திரை குழு, சிவகிரி மடத்திற்கு சென்றனர். அங்கு ராகுல்காந்தியை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர், சமூக சீர்திருத்த வாதியும், துறவியுமான ஸ்ரீநாரயணகுருவுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த தீபாராதனையிலும் பங்கேற்றார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் ஸ்ரீநாராயணகுருவை வழிபட்டனர்.

முன்னதாக தனது ஒற்றுமை பயணம் பற்றி ராகுல் காந்தி கூறும்போது, இந்து மதத்தின் பிரதான வார்த்தை ஓம் சாந்தி. ஆனால் இந்துக்களின் காவலன் என்று கூறிகொள்ளும் கட்சி, ஓம் சாந்தி என்ற வார்த்தைக்கு எதிராக நடந்து கொள்கிறது. அவர்கள் மதநல்லிணக்கத்தை கெடுக்கிறார்கள். ஒற்றுமையை சீர்குலைக்கிறார்கள். மக்களை பிளவுபடுத்துகிறார்கள். இதனை தடுக்கவும், மக்களை ஒன்றுபடுத்தவுமே நான் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளேன் என்றார்.

சிவகிரி மடத்தில் வழிபாடு முடிந்த பின்னர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மீண்டும் தொடங்கி கொல்லம் மாவட்ட எல்லையான கடம்பாட்டு கோணத்தை சென்றடைந்தது. அங்கு ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி, மாலை 4 மணிக்கு மீண்டும் பாதயாத்திரையை தொடங்குகிறார்.

கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரை நேற்றுடன் 8-வது நாளை எட்டியுள்ளது. ராகுல் காந்தி 8 நாட்களாக தொடர்ந்து நடந்து வருவதால் அவரது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் எனது ஒற்றுமை பயணம் தொடரும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ராகுலின் பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் குழுவினர் ராகுல் காந்தி இன்று ஓய்வெடுக்க உள்ளதாக கூறியுள்ளனர். இதனை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் தெரிவித்தனர். இன்று ராகுல் காந்தி ஓய்வு எடுப்பதால் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனக்கூறியுள்ளனர். இதனால் இன்று பாதயாத்திரைக்கு ஓய்வு கொடுக்கும் ராகுல் காந்தி நாளை கொல்லம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.