உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன் பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை.
இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மாநாட்டையொட்டி சமர்கண்ட் நகரின் முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. உறுப்பு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் பார்வையாளர் நாடுகள் உள்பட 14 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.