நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை பெறவேண்டும். 40க்கு 40 வெற்றி கிடைப்பதற்கு இந்த விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும் என முதல்வர் ஸ்டாலின், திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்று, விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின். பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கழக அடையாளமாய் கறுப்பு-சிவப்பு பார்டர் வைத்து வேஷ்டி தயாரித்தவர் அம்மையார் சம்பூர்ணம் சாமிநாதன். இவரைப் போல 10 சம்பூர்ணம் இருந்தால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது என்று கருணாநிதியே பாராட்டி இருக்கிறார். அவருக்கு பெரியார் விருது அளிப்பது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. சென்னை மாவட்டத்தில் தி.மு.கவை சிங்கம் போல வழிநடத்தியவர் டி.ஆர் பாலு. தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல, இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தி.மு.க குரலை ஓங்கி ஒலிப்பவர். அவருக்கு கலைஞர் விருது அளிப்பது சரியான தேர்வு.
நான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது, என்னை அழைத்துவந்து விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக அழைத்துச்சென்று கழகக்கொடி ஏற்ற வைத்த பெருமை குன்னூர் சீனிவாசனுக்கு உண்டு. ரத்தம், வியர்வை, உழைப்பை கொடுத்து இந்த இயக்கத்தை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் தொண்டுக்கான பாராட்டு அல்ல இது. எங்களின் நன்றியை காட்டுவதற்கான விழா. நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களை 54 தொகுப்புகளாக வெளியிட்டு உள்ளோம். தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா; தமிழ்நாடு என்ற பெயரை கூறிய போது சட்டப்பேரவை உற்சாகத்தில் மிதந்தது. தமிழகத்தை அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது நாம் தான் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
ஜிஎஸ்டியால் மாநில நிதி உரிமையும், நீட் தேர்வால் கல்வி உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த முயற்சி நடக்கிறது. ஒற்றை மொழியாக இந்தியை திணிப்பதை ஏற்க முடியாது. வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை நாட்டின் அனைத்து மாநிலங்களும் தன்னிறைவு அடைய வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைதான் இன்று நாட்டிற்கு அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகிறது.
திராவிடம் என்பது சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம், மொழிப்பற்று, இனவுரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் ஆகியவை இணைந்தது. மொத்தத்தில் திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்லக்கூடிய கருத்துதான். அனைவருக்குள்ளும் ஓடுவது சிவப்பு ரத்தமாக இருக்கலாம். தி.மு.க தொண்டனுக்குள் ஓடுவது கருப்பு சிவப்பு ரத்தம். இந்த கருப்பு சிவப்பு ரத்தத்தின் சூடு தணியாதவரை இந்த இயக்கத்தை மட்டுமல்ல, இந்த இனத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது.
தமிழகத்தில் இனி தொடர்ந்து திமுக ஆட்சிதான் என்பதை தொண்டர்களை மனதில் வைத்து சொல்கிறேன். நான் சொல்லிச் செய்கிறவன் அல்ல, சொல்லாததை செய்பவன். கருணாநிதியின் முழக்கம் என்பது ‘சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்’. எனது பாணி என்பது ‘சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என்பது. நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியைப் பெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை இப்போதே ஆற்ற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி கிடைப்பதற்கு இந்த விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும். இவ்வாறு அவர் பேசினார்.