ராகுல்காந்திக்கு பிரதமராகும் தகுதியில்லை: குஷ்பு

ராகுல் காந்தி பிரதமராக தகுதியில்லை. என்றுமே கரை சேர முடியாத காங்கிரஸ் கட்சியை கரை சேர்க்க ராகுல்காந்தி சென்று கொண்டிருக்கும் நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏமாற்றமே மிஞ்சும் என்று நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபயணத்தை கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன்விளையில், கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு செய்தார். ஞாயிறு முதல் கேரளாவில் பாதையாத்திரையை தொடங்கியுள்ளார். கேரள மாநிலத்தில் 19 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்த பாதயாத்திரை பற்றி பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளதாவது:-

செல்லும் இடங்களில் தேச விரோதமாகவும், மத துவேசத்துடனும் பேசிக் கொண்டிருப்பவர்களோடு மட்டுமே பேசி வருகிறார். இது கூடுதல் அதிருப்தியை தான் ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் கிடையாது. ஜனநாயக ரீதியாக எதுவும் நடப்பதில்லை. நான் காங்கிரசில் இருந்த போது ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அடுத்து யாரை தலைவராக்கலாம் என்று கேட்பார்கள். நான் உள்பட பலர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெயரை சொன்னோம். உடனே எல்லோரும் என் மீது பாய்ந்து விட்டார்கள்.

நான் பதவியில் இருக்க மாட்டேன் என்பார். அதன் பிறகு பலரும் அவரிடம் போய் கெஞ்சி தலைவர் பதவிக்கு அழைத்து வரவேண்டும். அப்படி ஒரு நாடகம் நடத்துவார்கள். காங்கிரஸ் மீது மக்களும், கட்சியினரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது. ராகுலுக்கு பிரதமர் ஆகும் தகுதியும் இல்லை. அப்படி ஒரு வாய்ப்பை மக்கள் ஒரு போதும் வழங்க மாட்டார்கள்.

வெறும் டுவிட்டரில் மட்டும் தப்பும், தவறுமாக எழுதுவதால் பிரதமராகி விட முடியுமா? கர்நாடகாவில் ஊழல் வாதியான டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை பாஜக திட்டமிட்டு பழிவாங்குவதாக கூறுகிறார்கள். அப்படியானால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இதே போல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி மீது விசாரணை நடத்தப்பட்டதே அது காங்கிரசின் தூண்டுதலா உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நீண்ட காலத்துக்கு பிறகு நாட்டுக்கு வலிமையான நல்ல தலைமை கிடைத்து இருக்கிறது. அடுத்த தேர்தலிலும் மக்கள் பாஜகவிற்கு தான் வாக்களிப்பார்கள். மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.