எழுதாத பேனாவிற்கு என்பது கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு பதில், மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்யலாமே என்று பிரேமலதா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி மெரினாவில் உள்ளது. அங்கிருந்து நேராக செல்லும் வகையில் கடலில் இந்த பேனா அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. பேனா சிலை அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை அளித்துள்ளது. இதற்கு சில அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் பேனா சிலை வைப்பதற்கு பதில் அடிப்படை வசதிகளை செய்யலாமே என்று கூறியுள்ளார்.
தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் நலமாக உள்ளார் என தெரிவித்தார். இந்த பேனரில் கேப்டனின் இரண்டு கண்கள் எப்படி இருக்கிறதோ, அது போன்று தான் கேப்டன் அனைத்தையும் பார்த்து கொண்டு இருப்பதாக கூறினார்.
எந்த நோக்கத்திற்காக இந்த கட்சி துவங்கப்பட்டதோ, அதை நிச்சயம் நாம் அடைவோம். நாம் செய்த உதவிகளோ, தர்மங்களோ என்றும் வீண் போகாது எனவும் கூறினார்.
எழுதாத பேனாவிற்கு என்பது கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு பதில், மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்யலாமே? பேனா வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாமே? தங்க பேனாவை தான் கேப்டன் விஜயகாந்த் ஒரு விழா வைத்து கொடுத்து விட்டாரே, பின் எதற்கு பேனாவை மீண்டும் வைக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றாமல் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
ஆ.ராசா இந்துக்களை பற்றி பேசியது சரியா? தவறா? என்ற கேள்விகளை மீண்டும் யாரிடமும் கேட்காதீர்கள். இந்து சமய அறநிலை துறை அமைச்சரிடம் கேளுங்கள் என்றார். அவர்கள் தான் பின் வழியாக சென்று பூஜை குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று கடவுள் பின்னாடி செல்கிறார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புகை , மது உள்ளிட்ட பழக்கங்களில் சம உரிமை வேண்டும் என பெண்கள் ஈடுபடக் கூடாது. புகை ,கஞ்சா , மது உள்ளிட்ட பழக்கத்திற்கு ஆளாவதால் பெண்கள் பாலியல் துன்பத்தில் சிக்குகிறார்கள். ஆண்களுக்கு நிகராக சாதிப்பதில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் .பெண்மையின் புனிதத்தை காக்க வேண்டும் என்றார்.