டென்னிஸ் வீராங்கனை லிண்டாவுக்கு மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கினார்!

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு உலகளவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சர்வதேச விளையாட்டுத் தொடர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிந்த கையோடு சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த டென்னிஸ் தொடரில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு மகளிர் போட்டிகள் நடத்தப்பட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடரில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பல்வேறு வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

2017ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் நடைபெற்ற இந்த டென்னிஸ் தொடர் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றது. போட்டிகளை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. ஒற்றையர் இறுதிப் போட்டியில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த 17 வயது வீராங்கனை லிண்டா புருவிர்தோவாவும் போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை மேக்டா லினெட்டும் பலப்பரிட்சை செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லிண்டா புருவிர்தோவா 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டியை காண வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனை லிண்டா புருவிர்தோவாவுக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார். இதில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பரிசுத்தொகையாக ரூ.2.38 கோடி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.