H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1044 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மருத்துவமனையில் 68 பேரும், மீதம் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் H1N1 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனை தமிழக அரசு மறைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஏராளமான மலை கிராம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு மேகாலயாவில் மலைவாழ் கிராம மக்களுக்காக செயல்படுத்தப்படும் மருத்துவ திட்ட செயல்முறைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
H1N1 வைரஸ் தொடர்பாக கடந்த 4 நாட்களாக சொல்லி வருகிறோம். காய்ச்சல் என்பது சாதாரணமாக இருந்துகொண்டே இருக்கும். பருவமழை காலங்களில் காய்ச்சல் அளவு கொஞ்சம் உயரும். இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளோம். ஆனால் சிலர் இதனை அரசியாக எடுத்துக்கொண்டு விடுமுறை அளிக்க வேண்டும், தனி வார்டு அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இன்று வரை H1N1 வைரஸ் பாதிப்பால் 368 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்றை விட இன்று 4 பேருக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 42 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 89 பேர் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் 264 பேரும், அரசு மருத்துவமனைகளில் 15 பேரும் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனை பதற்றம் ஏற்பட்டுள்ளது போல் பேசுகிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை தேவை இல்லை என்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். இதனை சரியாக பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம். பள்ளிகளிலும் மாணவர்கள் யாரேனும் காய்ச்சலுடன் வந்தால், பெற்றோரை வரவழைத்து வீட்டுக்கு அனுப்ப அறிவுறுத்தியுள்ளோம். அதனால் அச்சமடையும் அளவிற்கு பிரச்சினையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.