பார்த்தா சாட்டர்ஜி, நடிகை அர்பிதாவின் ரூ.46 கோடி சொத்துக்கள் முடக்கம்!

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியின் ரூ.46 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேற்குவங்காளத்தின் திரிணாமுல் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு, ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்கத்துறையில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து 49.80 கோடி ரூபாய் பணம், 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள், நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மேற்குவங்காள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இந்த கைதை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜியின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மேலும், திரிணாமுல் காங்கிரசில் இருந்தும் பார்த்தா சாட்டர்ஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி தற்போது சிபிஐ விசாரணை காவலில் உள்ளார். அதேவேளை நடிகையும், உதவியாளருமான அர்பிதா முகர்ஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியின் 46 கோடியே 22 லட்ச ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. 40.33 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து, 35 வங்கி கணக்குகளில் இருந்த 7.90 கோடி ரூபாய் பணம் என ரூ.46 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.