சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார்.
சென்னை வந்துள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். தஞ்சையில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை வந்திருந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி உள்ளார். அவருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகனும் உடன் சென்றிருந்தார். இவர்கள் இருவரும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் கவர்னருடன் பேசிக் கொண்டிருந்தனர்.
தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வரும் வேளையில் தமிழக அரசு இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியாக மாநில கல்வி கொள்கைக்கான குழு அமைத்துள்ளதால் அதுபற்றியும் இவர்கள் விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது. ஏற்கனவே கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருந்தபோது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது மற்றும் தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசி இருந்தார். இதன் தொடர்ச்சியாக இப்போது பேச்சுவார்த்தை அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.