விடியா தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரான பழனிசாமி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பின்னர் சேலம் செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை விமானநிலையம் வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் நிலை உள்ளது. இதை தடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தினோம். தி.மு.க., வில் இருந்து ஓவ்வொருவராக விலகுவது திராவிட மாடல் அரசின் சாதனை.
இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக ராசா பேசியது கீழ்த்தரமானது. இதற்கு அவரது கட்சி தலைவர் பதில் அளிப்பார் என எதிர்பார்த்தேன். பதில் கிடைக்கவில்லை. அ.தி.மு.க., விவகாரமாக டெல்லி சென்றதாக சொல்வது தவறானது. விடியா தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் தற்போது பரவி வரும் காய்ச்சலை தடுப்பது அரசின் கடமை. எளிதாக பரவும் காய்ச்சல் என மருத்துவர்கள் சொல்கின்றனர். இந்த அரசு விழிப்போடு இருந்து குழந்தைகளை காப்பதுடன், மருத்துவக் குழு ஆராய்ந்து இந்த காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.