தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா காலமானார். அவருக்கு வயது 76. எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான சேடப்பட்டி முத்தையா, அதிமுகவின் பொருளாளராகவும், எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். அதிமுக சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் சபாநாயகராக பதவி வகித்த சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கினார்.
இதையடுத்து, அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர், தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். அதன்பின்னர் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில், 2006ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் “சேடபட்டியார்” என்று அழைக்கப்பட்டார். மதுரை மாவட்டத்தில் பிரபலமான அரசியல்வாதியாக விளங்கிய அவர், டி.கல்லுப்பட்டி யூனியனில் வெகுஜன ஆதரவு பெற்ற தலைவராகவும் விளங்கினார்.
மாணவர் பருவத்திலேயே திமுக மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்ட சேடப்பட்டி முத்தையா, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத்தீவிரமாக செயல்பட்டவர். திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து அதிமுகவை ஆரம்பித்தபோது, அவரோடு அக்கட்சியில் ஐக்கியமானார். மதுரை மாவட்டத்தில் எம்ஜிஆருக்கு கிடைத்த ஆதரவிற்கு முக்கியப் பங்காற்றியவர் சேடப்பட்டி முத்தையா.
இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அண்மையில் மதுரை சென்ற முதல்வர் ஸ்டாலின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில நாட்களாகவே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சேடப்பட்டி முத்தையா, சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா அவர்களின் மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக 1991 – 1996 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் முன்னிலையில் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்ட சேடப்பட்டி முத்தையா அவர்கள். அப்போது முதல், கழகத்தின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார். அண்மையில் மதுரை சென்றிருந்த போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி, தற்போது வந்தடைந்து வேதனையைத் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.