சனாதன தர்மத்தில் இந்துக்கள் எல்லோரும் சூத்திரன் என்று எங்கு சொல்லி உள்ளது என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்பி ஆ.ராசாவின் மனு தர்ம சாஸ்திரத்தில் இந்துக்கள் குறித்து பேசிய பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி மிக முக்கிய பேசு பொருளாக இருக்கிறது. ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கடையடைப்பு, உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆ.ராசவுக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் ஆதரவாகப் பேசி வருகின்றனர். குறிப்பாக திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மனு தர்ம சாஸ்திர எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா காரைக்குடியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆ. ராசா வெறி நாய் கடித்த நபர் போல் பேசி வருகிறார். சனாதன தர்மம் இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அவர் பேச்சு அருவருக்கத்தக்கது மட்டுமல்ல. இந்து மத விரோதமானது. இந்து மதம் அதுவாக உருவானது. இந்த நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு சனாதன தர்மமே காரணம். சனாதன தர்மத்தில் இந்துக்கள் எல்லோரும் சூத்திரன் என்று எங்கு சொல்லி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் திமுகவில் 90% இந்துக்கள் திமுக இருக்கின்றனர் என்கின்றனர். இந்துக்கள் எல்லாம் விபாச்சாரிகள் மகன்கள் என்று ஆ.ராசா பேசுவதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? உடனடியாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் புகார் கொடுத்தும் வருகின்றோம். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லவும் தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சீமான் ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து கேட்டபொழுது, “எல்லா பைத்தியமும் ஒன்றாக சேர்ந்து உள்ளது. ஆ.ராஜா கிறிஸ்தவ மிஷனரிகள் சொல்வதை கேட்டு பேசுகிறார். அவருக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது” என்றார்.