மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?: ப.சிதம்பரம்

மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:-

மதுரை ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு. நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்? பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே? அறுவை சிகிச்சை பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.