தமிழக மக்களை தவறாக வழி நடத்தும் திமுக அரசு: ஜே.பி.நட்டா

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திமுக அரசைக் கடுமையாகச் சாடினார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இப்போது இரு நாட்கள் பயணமாகத் தமிழகம் வந்துள்ளார். நேற்று மதுரை சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனிடையே சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சென்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

இலக்கியம், கலாச்சாரம் மிகுந்த தமிழகத்து வந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.. ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் எனக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ராமநாதசுவாமியின் அருளைப் பெற்று உள்ளேன். இங்கு வரும் போதெல்லாம் எனக்கு புதிய உத்வேகம் கிடைக்கிறது.

கடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு தரப்பு மக்களிடமும் பாஜக நிர்வாகிகளுடனும் நான் உரையாடினேன். பாஜகவுக்கான ஆதரவு மக்களிடம் அதிகரித்து உள்ளதை என்னால் உணர முடிந்தது. இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் எனப் பலரும் பல்வேறு கட்சிகளில் இருந்தும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். பிரதமரின் வளர்ச்சி திட்டங்கள் காரணமாகப் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாஜகவுக்கு வருகிறார்கள். பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழகத்திற்கு என எப்போதும் தனியாக ஒரு இடம் உள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகிறது.

பிரதமர் மோடிக்கு எப்போதும் கூட்டாட்சி மீது நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமரின் ஆட்சிக் காலத்தில் பல முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இதிலும் கூட திமுக அரசு தமிழகத்தில் மோசமான அரசியலை முன்னெடுத்து உள்ளது. கூட்டாட்சி மனப்பான்மை உடன் அவர்கள் பணியாற்றவில்லை. மற்றவர்களைக் குறை சொல்வதே அவர்களின் முக்கிய வேலையாக உள்ளது. இதற்காகத் தான் படித்த தலைவர்கள் வேண்டும் என்கிறோம். இவர்களுக்கு மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொது பட்டியல் என்றால் என்ன என்றும் தெரியவில்லை. தமிழக மக்களை திமுக அரசு தவறாக வழிநடத்துகிறது.

தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பாஜக அளித்து உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியில் பாஜகவுக்கு நம்பிக்கை உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணம். ஆனால், திமுக அரசு குடும்ப அரசியலை முன்னெடுக்கிறது. ஊழல் செய்கிறார்கள். நேற்று நான் சொன்னது போல இது வாரிசு அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது.

காங்கிரஸ் வலுவாக இருக்கும் இந்த சிவகங்கை பகுதி இன்னும் கூட பின்தங்கியே உள்ளது. தமிழக மக்களுக்கு மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அமைய வேண்டும் என விரும்புகின்றனர். பாஜக மிகப் பெரிய வளர்ச்சியை அடைய உள்ளது. எங்களுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.