நீதித்துறை பற்றி அவதூறாகப் பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை டிஸ்மிஸ் செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.
லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்த சங்கர், 2008ஆம் ஆண்டில் அரசு உயரதிகாரிகளின் டெலிபோன் உரையாடல் லீக் ஆனது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சங்கர், புழல் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்தார். சங்கர் தொடர்பான பணியிடை நீக்க விசாரணை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கிற்குப் பின்னர் சங்கர், ‘சவுக்கு’ என்ற பெயரிலான தனது இணையதளத்தில் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாக பேட்டி அளித்து வந்தார். அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்த சவுக்கு சங்கர் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் விமர்சனம் செய்தார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவு செய்தது. அதன் பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சவுக்கு சங்கர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செப்டம்பர் 15ஆம் தேதி சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை அடுத்து, சவுக்கு சங்கர் உடண்டியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அன்று நள்ளிரவே திடீரென மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், நீண்ட காலமாக சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து வந்த சவுக்கு சங்கரை டிஸ்மிஸ் செய்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற காரணத்தால், அரசுப் பணியில் இருந்து சவுக்கு சங்கரை நிரந்தரமாக நீக்கி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சஸ்பெண்ட் ஆனது முதல் தற்போது வரையிலான 13 ஆண்டு காலத்தில் சவுக்கு சங்கர் சுமார் 65 லட்சம் ரூபாய் பிழைப்பு ஊதியமாகப் பெற்று வந்ததாக சமீபத்தில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த டிஸ்மிஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.