நாங்கள் ஓரளவிற்கு தான் அமைதி காப்போம்: அண்ணாமலை

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் இதுவரை ஒருவரை கூட காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாக கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாஜக பிரமுகர்கள், பாஜக அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளன. இதனால் கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பாஜக தரப்பில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன

இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

கடந்த இரு நாட்களாக பாஜக தொண்டர் மீது, சொத்துகள் மீது, அலுவலகம் மீது பல்வேறு தாக்குதல் நடப்பது கண்டிக்கத்தக்கது. கோவையில் மட்டும் 12 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. அதுதொடர்பாக ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் எனபதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி. சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்களை கைது செய்ய காவல்துறை ஏன் அக்கறை காட்டவில்லை.

விரைவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிர்வாகிகளின் வீடுகளுக்கு சந்திக்கவுள்ளோம். 26ம் தேதி மாபெரும் அறப்போராட்டம் கோவையில் நடைபெறும். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர் பாஜக தொண்டர்கள் கைது செய்வதில் அக்கறை காட்டும் காவல்துறை, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்களை கைது செய்யதது ஏன்?. நாங்கள் என்ன இயேசுவா, ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருப்போம். எனவே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலைமைச்சருக்கு நிபந்தனையாக மட்டுமல்ல எச்சரிக்கையாக சொல்கிறோம்.

சில நண்பர்கள் செங்கலை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. யார் என்ன செய்தாலும் மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை அமையும். மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணம் 95% கொடுக்கப்பட்டு விட்டது. அக்டோபர் 2026ல் எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.